அறத்துப்பால்

மனிதன் எப்படிப் வாழ வேண்டும், எத்தகைய ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறும் பகுதி தான் அறத்துப்பால்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை

குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

மு.வ விளக்கம்:

கேட்பவர்களின் பலரும் வெறுக்கும் படியாக பயன் இல்லாத சொற்களைப் பேசுபவன், எல்லோராலும் இகழப்படுவான்.

குறள் 192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் தீது.

மு.வ விளக்கம்:

பலர் முன்னிலையில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுவது, நட்பை கெடுக்கும் செயல்களை செய்வதைவிட தீமையானது.

குறள் 193

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

மு.வ விளக்கம்:

பயன் இல்லாத சொற்களைப் பேசுபவன், “நயனில்லாதவன்” என்று கூறப்படுவான்.

குறள் 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார்கட்.

மு.வ விளக்கம்:

நன்மையைக் கெடுக்கும் பயனற்ற சொற்களை பலரிடமும் பேசுவது அறத்திற்கும் பொருளிற்கும் மாறானது.

குறள் 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

மு.வ விளக்கம்:

நல்ல பண்புடையவர் சொன்னாலும் பயனில்லாத சொற்கள் பேசினால் அவரின் சிறப்பு குறையும்.

குறள் 196

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

மு.வ விளக்கம்:

பயனற்ற சொற்களைப் பேசுபவனை மனிதன் என்று சொல்வதை விட, மக்களுள் “பதர்” என்று கூறலாம்.

குறள் 197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

மு.வ விளக்கம்:

சான்றோர் நயனில்லாத சொற்களைச் சொல்லினாலும், பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

குறள் 198

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

மு.வ விளக்கம்:

பெரும் பயன் இல்லாத சொற்களை அறிவுடையவர்கள் சொல்லமாட்டார்கள்.

குறள் 199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார்
மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.

மு.வ விளக்கம்:

மயக்கம் நீங்கி மாசற்ற தெளிவுடையவர்கள், பொருள் இல்லாத சொற்களை சற்றும் சொல்லமாட்டார்கள்.

குறள் 200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

மு.வ விளக்கம்:

பேசும்போது பயன் தரக்கூடிய சொற்களையே பேச வேண்டும்; பயனில்லாத சொற்களைச் சொல்லக்கூடாது.