அறத்துப்பால்

மனிதன் எப்படிப் வாழ வேண்டும், எத்தகைய ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறும் பகுதி தான் அறத்துப்பால்.

அதிகாரம் 36 : மெய்யுணர்தல்

குறள் 351

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

மு.வ விளக்கம்:

மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என தவறாக உணர்ந்து வாழ்ந்தால், சிறப்பில்லாத துன்பப் பிறவி ஏற்படும்.

குறள் 352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

மு.வ விளக்கம்:

மயக்கம் நீங்கி குற்றமற்ற மெய்யுணர்வு உடையவர்க்கு, உண்மையை அறிந்து இன்ப நிலை கிடைக்கும்.

குறள் 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
வையத்தின் வான நணிய துடைத்து.

மு.வ விளக்கம்:

ஐயத்தை நீக்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு, இவ்வுலகத்தைவிட மேலுலகம் அருகிலேயே இருப்பதுபோல் தோன்றும்.

குறள் 354

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.

மு.வ விளக்கம்:

மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு ஐம்புலன்களை அனுபவித்தாலும் அதனால் பயன் இல்லை.

குறள் 355

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

மு.வ விளக்கம்:

எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் வெளிப்புறத்தைப் பார்த்து ஏமாறாமல், அதன் உண்மைத் தன்மையை அறிதலே அறிவு.

குறள் 356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்
தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.

மு.வ விளக்கம்:

மெய்ப்பொருளை கற்று உணர்ந்தவர் மீண்டும் பிறக்காத வழியை அடைவார்.

குறள் 357

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

மு.வ விளக்கம்:

உள்ளத்தை ஆராய்ந்து உண்மையை உறுதியாக உணர்ந்தவர்க்கு மீண்டும் பிறப்பு உண்டு என எண்ண வேண்டாம்.

குறள் 358

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.

மு.வ விளக்கம்:

பிறவிக்குக் காரணமான அறியாமையை நீக்கி, சிறப்பான மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு.

குறள் 359

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின்
மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.

மு.வ விளக்கம்:

மெய்ப்பொருளை உணர்ந்து பற்றுகளை அழித்தொழுகினால், துன்பத்தைத் தரும் நோய்கள் அணுகாது.

குறள் 360

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.

மு.வ விளக்கம்:

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றையும் ஒழித்தால், வாழ்க்கையின் துன்பங்கள் குறையும்.